நல்ல நிர்வாகிகள் அனைவரும் தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் தேர்ந்த நிர்வாகி தன்னைச் சுற்றி புத்திசாலிகளை வைத்துக்கொண்டு, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்கும் திறன் பெற்றவராக இருப்பார். ரியல் எஸ்டேட், சூதாட்ட நிறுவனம், கல்வித் தொழில் என தொட்ட அனைத்துத் தொழில்களிலும் திவாலான ஒருவர் உண்டு. அவர் பரம்பரைச் செல்வந்தர் என்ற ஒரே காரணத்தினால் வெற்றியாளர் என்ற மாயப் பிம்பத்தை ஏற்படுத்தி, மக்கள் கேட்க விரும்புவதை அவர்கள் விரும்பும் மொழியில் சொல்லக் கூடியவர்.
தலைமைப் பதவியில் இருப்பதால் மட்டுமே ஒருவர் தலைவர் ஆகிவிடுவதில்லை என்பதற்கானச் சிறந்த உதாரணம். அவர்தான் டிரம்ப்.அவருக்கு எல்லாமே பேரம்தான். சாதாரண வீடு வாங்கி விற்கும் ஒருவர் கூட அந்த வீடு எவ்வளவு விலை பெறுமோ அதைவிட நூறு மடங்கு அதிக விலை வைத்து பேரம் பேசலாம் எனச் சொல்வதில்லை. ஆனால், இவரோ, இறக்குமதி வரியை 180 நாடுகளுக்கு எந்த சித்தாந்தமும் இல்லாமல் குத்துமதிப்பாக ஏற்றிவிட்டு பேரத்திற்கு வா என அழைக்கிறார்.
வரலாற்றுப் பின்னணி
டிரம்ப்தான் முதன் முதலாக காப்புவரியை விதிக்கிறாரா என்றால் இல்லை. வரலாற்றைப் பார்த்தால், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் காப்புவரி அடிக்கடி விதிக்கப்பட்ட ஒன்றுதான். 1930களில் பெரும் பொருளாதார மந்தநிலையின் போது, ஸ்மூட்-ஹாலி என்ற காப்புவரிச் சட்டம் இயற்றப்பட்டது. இது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவென்று கொண்டு வரப்பட்டாலும், உலகளாவிய வர்த்தகத்தில் 66% சரிவை ஏற்படுத்தி, மந்தநிலையை இன்னும் மோசமாக்கியது. வரலாறு நமக்குக் காட்டுவது என்னவென்றால், காப்புவரிப் போர் யாருக்கும் நன்மை பயக்காது என்பதுதான். ஆனால் இன்றைய உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி அமைப்பில், 1930களை விட அதிக சிக்கல்கள் உள்ளன.
Add Comment