டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ? என்ற கேள்வியும் மனத்தின் ஒரு மூலையில் அவ்வப்போது எழத்தானே செய்கிறது? செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களின் வரவு, நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது.
நகரத்தில் வசிக்கும் ஒருவர் ஒன்பது ஆண்டுகளாகக் காரில்தான் எங்கும் சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவரது திறன்பேசியிலிருந்த கூகுள் மேப் வேலைசெய்யவில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பரின் வீட்டுக்கு அப்போது அவர் சென்றுகொண்டிருந்தார். என்ன முயன்றும் நண்பரின் வீட்டுக்கு வழி கண்டறிய முடியாமல் அவர் தொலைந்துபோனார். இந்தச் சம்பவம், இணையத்தின் மீதான நமது கண்மூடித்தனமான சார்பைக் குறித்துக் கேள்வியெழுப்புகிறது. இது ஓர் எடுத்துக்காட்டுதான். இப்படிப் பல விஷயங்களுக்கு இணையத்தைச் சார்ந்திருப்பது இன்று அதிகரித்துவிட்டது. இத்தகைய சார்பு, மூளையின் நினைவுத் திறனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கூறுகிறது நேச்சர் ஆய்விதழில் வெளியாகியுள்ள அண்மைச் செய்தித்தொகுப்பொன்று. அதன் சாரத்தை இங்கு பார்ப்போம்.
‘டிஜிட்டல் அம்னீசியா’ என்ற சொல் சில ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. அதாவது, சில தகவல்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுவதில்லை. ஏனெனில், அவை நமது டிஜிட்டல் சாதனத்தில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவற்றை நினைவில் கொள்வதை நாம் அவசியமானதாகக் கருதுவதில்லை. மற்றொருபுறம், ‘மூளை அழுகல்’ என்ற சொல்லைச் சென்ற ஆண்டிற்கான சொல்லாக அறிமுகப்படுத்தியது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம். தேவையற்ற இணையக் குப்பைகளைப் பார்ப்பதால் ஒருவரின் மனநலம் பாதிப்புக்குள்ளாவதை இது குறிக்கிறது.
Add Comment