பாசக்கயிறு
அவன் தனது மனைவியைக் கொல்ல முடிவெடுத்தான். அதுவும் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாமல். சிக்கிக்கொண்டால் எப்படி அவன் காதலியை அடைவது? காதல், வெறியாக மாறி அவனை முடுக்கி முன்னேறச்செய்தது. குறித்து வைத்திருந்த நல்ல நாளில் நைலான் கயிறுடன் தன் மனைவியைப் பின்னாலிருந்து அணுகினான்.
நைலான் கயிறு அவளது கழுத்தில் மாலையாக விழுந்தது. விழுந்தது என்னவென்று பார்க்கக்கூட அவளுக்கு அவகாசம் இருக்கவில்லை. அது உடனே அவளது கழுத்தைப் பற்றி, இறுக்கியது. அவளும் இயன்றவரையில் போராடினாள். இருந்தும் பலனில்லை. உடல் சோர்ந்து, உயிரும் சோர்ந்தாள். திட்டத்தில் முதற்பகுதி நிறைவேறியது. அடுத்ததாக, அவளது உடலைத் தூக்கில் தொங்கவிட்டான்.
‘போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் இறந்தது மூச்சுத்திணறலால்தான் என்பது உறுதியாகிவிடும். அவளது உடலில், தான் வேறெந்தப் பகுதியிலும் காயத்தை ஏற்படுத்தவில்லை. போலீசார் சந்தேகப்படாதபடி நடித்துவிட்டால் போதும்’ என்று எண்ணமிட்டான். அதேபோல, குறைசொல்ல முடியாதபடி நடிக்கவும் செய்தான். மனைவியைத் தான் திட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது அவள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும் சொல்லியழுதான்.
Add Comment