நெருப்பின் நாக்குகள்
தகவல் அறிந்து தீயணைப்புத்துறை வந்து பார்த்தபோது வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியிருந்தது. மெர்க்கேப்டேனின் மெலிதான வாடையைக் காற்றில் அப்போதும் உணரமுடிந்தது. சமையல் எரிவாயுவாக நாம் பயன்படுத்தும் பியூட்டேன் வாயுவுக்கு மணம் கிடையாது. எனவே, கசிவைக் கண்டறியும் பொருட்டு அதனுடன் சிறிதளவு மெர்க்கேப்டேன் சேர்மம் சேர்க்கப்படுகிறது.
வெப்பமும் வாயுக்கசிவும் அடங்கியபின் காவல்துறை தன்னுடைய புலனாய்வைத் தொடங்கியது. தடயவியல் வல்லுநரும் அதற்குள் வந்துசேர்ந்திருந்தார். எரிந்த வீட்டில் கருகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்ததால் தெய்வாதீனமாக அப்பெண்ணின் இரண்டு வயதுக் குழந்தை தீயின் வாயிலிருந்து, தப்பித்திருந்தது. ஆரம்பக்கட்டச் சோதனையிலேயே அது விபத்தல்ல என்பதைக் கண்டறிந்தார் தடயவியலாளர்.
மல்லாக்கக் கிடந்த சடலத்தின் மேற்பகுதி மட்டுமே கருகியிருந்தது. தரையுடன் ஒட்டியிருந்த அடிப்பகுதி கருகவில்லை. அடிப்பகுதியின் ஆடைகளும்கூட எரியாமல் எஞ்சியிருந்தன. வீடு எரிந்துகொண்டிருந்தபோது அப்பெண் உயிருடன் இல்லை அல்லது நினைவுடன் இல்லை என்பதை அது உணர்த்தியது. நினைவு இருந்திருந்தால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவள் அங்குமிங்கும் ஓடியிருப்பாள். எனவே, உடலின் அனைத்துப் பகுதிகளும் எரிந்திருக்கும். குறிப்பாக ஆடைகள்.
Add Comment