காயமே இது மெய்யடா
அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும் மருத்துவமனையில் சேர்த்தனர். செல்வராஜின் காயங்கள் அபாயகரமானவையாக இல்லை. ஆனால், அருணுக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவனை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. சம்பவ இடத்தை ஆய்வுசெய்த தடயவியல் வல்லுநர் அவர்களுக்கிடையில் கைகலப்பு நடந்திருப்பதை உறுதிசெய்தார்.
மருத்துவமனையில் இருந்த செல்வராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தான் அருணுக்குப் பணம் கொடுத்திருந்ததாகவும் அதைத் தராமல் அவன் ஏமாற்றிக்கொண்டே இருந்ததாகவும் கூறினான் செல்வராஜ். செல்வராஜின் வாக்குமூலத்தின்படி, சம்பவ நாளன்று கடன்பாக்கி தொடர்பாக இருவருக்கும் சூடான சொற்போர் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து சொற்போர் மற்போராக வளர்ச்சியடைந்துள்ளது. இறுதியில் மற்போர் ஆயுதப்போராக மாறியுள்ளது.
மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து செல்வராஜைத் தாக்கியுள்ளான் அருண். அதைத் தடுப்பதற்குப் போராடிய செல்வராஜ் ஒருவழியாக அருணிடமிருந்து கத்தியைப் பிடுங்கியுள்ளான். பிறகு, தற்காப்புக்காக அருணைக் குத்தியுள்ளான். இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டது அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகளே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம். இவ்வாறாக தனது வாக்குமூலத்தை அளித்தான் செல்வராஜ்.
Add Comment