இறந்த நேரம் என்ன?
அந்தக் கணவனை யாராலும் தேற்ற முடியவில்லை. அவன் விண்ணதிர மண்ணதிர ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். “இத்தனைப் பாசமான கணவனுடன் இந்தத் துரதிர்ஷ்டக்காரிக்கு வாழக்கொடுத்து வைக்கவில்லையே!” பச்சாதாபப்பட்டனர் உறவினர்கள்.
“நான் ஆபிஸ் போன நேரத்துல உன்ன இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா. எவ்வளவு பணத்தைத் திருடிக்கிட்டுப் போயிருந்தாலும் நான் சம்பாதிச்சிடுவனே. பாவிங்க உன் உயிரையும் இல்லமா சேத்துத் திருடிக்கிட்டுப் போய்ட்டானுங்க. அவனுங்க நாசமாப்போக! ஐயோ ஆண்டவா! நீ இருக்கியா? இல்லையா?” நெஞ்சிலடித்து அழுது கொண்டிருந்தான்.
சுத்தியலால் பின் மண்டை உடைக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாகக்கிடந்தாள் அவனுடைய புதுமனைவி. வழக்கமான தடயவியல் சோதனைகள் நடந்தேறின. உடற்கூராய்வு முடிவுகளின்படி மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக இறந்திருக்கலாம். வீட்டில் சில பொருள்கள் மட்டுமே காணாமல் போயிருந்தன. எனவே, நடந்த கொலையானது திருட்டுக்காக நடந்ததுபோலத் தெரியவில்லை. எந்த விலைமதிப்புள்ள பொருள்களையும் விட்டுச்செல்வது தொழில்முறைத் திருடர்களின் வழக்கமில்லை. அந்த வீட்டுக்கு வந்துசெல்பவர்களை மோப்பம் பிடிக்கத்தொடங்கியது காவல்துறை. துக்கக்கடலில் மூழ்கியிருக்கும் கணவனின் பெயரையும் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டுமா? கணவனை ஒருமுறை நோக்கினார் காவல் ஆய்வாளர். அவன் சீதையைப்பிரிந்த இராமனைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தான். காக்கிச் சட்டைக்குள்ளும் இதயமொன்றிருக்கிறதே! சே! இவனாக இருக்க வாய்ப்பில்லை.
Add Comment