பொய்யைக் கண்டுபிடிப்பது எப்படி?
நாட்டை அதிர்ச்சியடையச்செய்த டிசம்பர் மாதங்களுள் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் டிசம்பரும் ஒன்று. புகார் கொடுத்து நெடுநாளான பின்னும் காணாமல்போன தன் மகளைக் கண்டுபிடிக்கவில்லையே எனக் கொதித்தார் பாயலின் தந்தை. சில நாள்களாகவே அவரது நச்சரிப்பு போலிசாருக்குப் பெரும் தொந்தரவாக மாறியிருந்தது.
பாயல் காணாமல்போனதாகச் சொல்லப்படும் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது சிறுவர் சிறுமியர் காணாமல்போவது வாடிக்கையாக இருந்துவந்தது. அனைவரும் குப்பத்துப் பிள்ளைகள் அல்லது சாலையோரம் வசிப்பவர்கள். அவர்களைத் தேடுவதில் போலிசார் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அன்றாடச் சோற்றுக்கே அல்லாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழைப்பெற்றோருக்குக் காவல் நிலையத்துக்கு நடையாய் நடக்கும் தெம்பில்லை.
ஆனால், பாயலின் தந்தை விடுவதாயில்லை. இருபது வயது இளம்பெண் பாயல். அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று எண்ணவே அந்தத் தந்தைக்கு அச்சமாக இருந்தது. ஓயாத அவரது முயற்சியால் கொஞ்சம் அசைந்தது நொய்டாவின் காவல்துறை. காணாமல்போனவர்கள் அனைவரும் செக்டார் முப்பத்தொன்றில் இருந்த டி-5 வீட்டைச்சுற்றியே காணாமல் போயிருந்தனர். சரி, எதற்கும் விசாரிப்போம் என்று அந்த வீட்டைச் சோதனையிட்டனர்.
Add Comment