யாருடைய ‘கைவண்ணம்’?
விரல் ரேகைத் தடயவியலுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘ஃபாரன்சிக்’ என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருவது அதுதான். எண்ணற்ற வழக்குகள் இத்தடயவியல் முறையினால் தீர்க்கப்பட்டுள்ளன. சங்கரராமன் கொலை வழக்கு, ஆட்டோ ஷங்கர் வழக்கு, சுவாதி கொலை வழக்கு, கோவை தொடர் குண்டுவெடிப்புகள் எனப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
முற்காலங்களில் குற்றவாளிகளை அடையாளம் காணுதல் மிகச்சிரமமாக இருந்தது. குறைந்தபட்சம், தொடர் குற்றவாளிகளுக்காகவாவது ஒரு பட்டியல் தேவைப்பட்டது. உடலிலுள்ள மச்சங்கள், தழும்புகளைக் குறித்துக்கொள்ளுதல் போதுமானதாக இல்லை. எனவே, குற்றவாளிகளின் உறுப்புகளைச் சிதைத்தல், முகத்தில் பச்சைகுத்துதல் போன்ற மனிதத்தன்மையற்ற முறைகள் கையாளப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், இக்கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறந்தது. ஃபிரெஞ்சுக்காவலர் அல்ஃபோன்ஸ் பெர்ட்டில்லான் ‘மானிட உடல் அளவையியல்’ முறையை அறிமுகப்படுத்தினார். ‘Anthropometry’ என்பர். குற்றவாளிகளின் உடலுறுப்புகளை அளவெடுக்கும் முறை அது. உயரம், பருமன், சீர்மை, கண் நிறம், மேனி நிறம், முடி நிறம் போன்றவையும் அதில் அடக்கம். இத்தகவல்களைக்கொண்டு தொழில்முறைக் குற்றவாளிகளுக்காக அவரொரு தரவுத்தளத்தை உருவாக்கினார்.
Add Comment