அடியொற்றிச்செல்லும் அறிவியல்
எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ கொலையாளியொருவனின் கைவண்ணம்தான் அவை. ராஜஸ்தானிலுள்ள குருத்துவாரா ஒன்றிலும் அந்தக் கைவண்ணம் காட்டப்பட்டிருந்தது. இரட்டைக்கொலைகள். இம்முறை போலீசாருக்கு அந்த சைக்கோ கொலைகாரனின் தடயம் கிடைத்தது. அவனுடைய வெற்றுப்பாதத்தடங்கள். குருத்துவாரா என்பதால் செருப்பணியாமல் நுழைந்திருக்கிறான் அந்த பக்திமான்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த ஷங்கரியாவின் பாதத்தடத்துடன் அவை கச்சிதமாக ஒத்துப்போயின. கால்தடங்கள் ஒத்துப்போவதாக அளிக்கப்படும் தடயவியல் அறிக்கை கருத்துரை மட்டுமே. அதனை மட்டுமேவைத்து குற்றத்தை நிரூபிக்கமுடியாது. ஆனால், மெய்ம்மை அடிப்படையிலான தடயங்களைச் சேகரிக்கும் சுமையை ஷங்கரியா போலீசாருக்குத் தரவில்லை. தன்னுடைய குற்றங்களை அவன் ஒப்புக்கொண்டான்.
ஷங்கரியாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, குறைந்தது எழுபது கொலைகளை அவன் செய்திருந்தான். அதனை ஒப்புக்கொள்ள அவன் அஞ்சவில்லை. கொலையைக் கலையாக்கிக்கொண்ட சைக்கோ கொலையாளிகளுக்கே உரிய பெருமித உணர்ச்சியது. ‘ஏன் இக்கொலைகளைச் செய்தாய்?’ என்று நீதிமன்றம் அவனிடம் கேட்டது. ‘கழுத்திலடித்துக் கொல்வது எனக்குப் பேரின்பத்தைத்தந்தது’ என்றானவன்.
Add Comment