கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பானு முஷ்டாக் இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்றிருக்கிறார். அவரது இதய விளக்கு (Heart Lamp) என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ள தீபா ஹஸ்தியும் அவரும் சேர்ந்து இந்த விருதைக் கடந்த இருபதாம் தேதி லண்டனில் பெற்றனர். இந்த விருதைப் பெரும் முதல் கன்னட எழுத்தாளர். முதல் மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு சிறப்புகளையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
ஏப்ரல் மூன்றாம் தேதி 1948 இல் கட்டுப்பாடு நிறைந்த இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் பானு. இவரது பள்ளிப்பருவம் ஹாசனில் கழிந்தது. இவரது கணவர் முஷ்டாக் முஹியுத்தீன், மூன்று மகள்கள், ஒரு மகன். விசா கிடைக்காத காரணத்தால் கணவரும் மகனும் பானுவுடன் பயணம் செய்ய இயலவில்லை. சோதனையாக அவர் இந்த விழாவிற்காக எடுத்துச் சென்றிருந்த பட்டுப் புடவையும் சில ஆபரணங்களும் அடங்கிய பெட்டி போக்குவரத்தின்போது காணாமல் போய்விட்டது. அவசரத்திற்கு லண்டனில் ஒரு புதுப் புடவை வாங்கி மே இருபதாம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
“என்னுடைய கதைகள், சாமானியக் குடும்பங்களின் வலிகள், வேதனைகள், மகிழ்ச்சியைக் கடத்தக்கூடியவை. இஸ்லாமியச் சமூகத்திலிருந்து வந்ததால் அதன் பிரதிபலிப்புகள் அதிகம் இருக்கும். ஆனால் மற்ற மதங்களில் இது போன்ற விஷயங்கள் நடக்காது என்று சொல்ல முடியாது. அதனால்தான் அந்தக் கதைகள் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தன என்று எடுத்துக் கொள்ளலாம். ஆணாதிக்க மனோபாவம் நிறைந்த இந்தச் சமூகக் கட்டமைப்பில் பெண்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள், உரிமைகள், பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராது. இஸ்லாமியக் குடும்பத்தில் இது இன்னும் சற்று அதிகம் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் எனது அப்பாவின் முதல் எண்ணம் குடும்பத்தில் உள்ள பெண்கள் முழுமையான கல்வியறிவு பெற வேண்டும் என்பதுதான். அதற்கேற்ப எங்கள் குடும்பத்தில் அனைவரும் முதுகலை பட்டதாரிகள். கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்தரம். இதுதான் எங்கள் வளர்ப்பு முறை.















Add Comment