கவிதா ரமணன்
கவிதா ரமணன், பிரவுன் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையில் ரோலண்ட் ஜார்ஜ் டுவைட் ரிச்சர்ட்சன் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கணிதக் கணக்கீடு மற்றும் சோதனை ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பயன்பாட்டுக் கணிதப் பிரிவின் இணைத் தலைவராகவும், பட்டதாரி ஆய்வுகளின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னையில் பிறந்த கவிதா ரமணனின் கல்விப் பயணம் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் தொடங்கியது. அவரது தந்தை ரமணன், மும்பையில் உள்ள புகழ்பெற்ற டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் கணிதப் பேராசிரியராக இருந்தவர். இவர் அல்ஜீப்ராயிக் ஜியோமெட்ரி, டிஃபெரன்ஷியல் ஜியோமெட்ரி ஆகிய துறைகளில் முன்னோடி ஆராய்ச்சியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை 1979ஆம் ஆண்டு பெற்றார். வீட்டில் நிலவிய அறிவுச் சூழல், கவிதாவுக்குக் கணிதத்தின் மீதான ஆர்வம் பெருகக் காரணமாக இருந்தது.
இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மும்பையில் கணினி அறிவியல் துறையில் சேர்ந்தார் கவிதா. 1992ஆம் ஆண்டு அவர் பட்டம் பெற்றபோது அந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவருக்கான இந்திய ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தை வென்றார். இது அவரது வருங்கால வெற்றிகளுக்கு முன்னோட்டமாக அமைந்தது.










Add Comment