08 – சோவியத்தின் மனமாற்றம்
சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள் அவசியம்தான் சோவியத்திற்கு. கம்பீரமாய் ஆண்டபின் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டுச் செல்கிறார்கள்.
இதை முழுமையாக நிரப்ப முடியாதென உணர்ந்து, கூட்டாக நிரப்ப முயன்றார்கள். ஆரம்பமுதலே ஸ்டாலினுடன் பயணித்த, ஜார்ஜி மக்ஸிமிலியானோவிச் மலென்கோவ் (1953-1955) சோவியத்தின் அதிபரானார். ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாகப் பணிகளைச் செய்து முடிப்பவர். இந்த குணமே, பதவி உயர்வுகளால் இவருக்கு ஸ்டாலினுக்கடுத்த நிலையைப் பெற்றுத் தந்திருந்தது.
ஆட்சி இவரிடம் சென்றதால், கட்சியின் தலைமைச் செயலாளரானார் நிகிதா குருஷவ். திறமையான கட்சி நிர்வாகி. உக்ரைனிலும், மாஸ்கோவிலும் முக்கிய பதவிகளை வகித்தவர். அதிகாரம் போதுமானது, சர்வாதிகாரம் தேவையில்லை என்ற மனநிலையில் இருந்தார்கள் இருவரும். முதலில் அரசாங்கத்தின் மேல் மக்களுக்கிருந்த பயத்தை போக்க வேண்டும். ஸ்டாலினின் இனப்படுகொலைகள், உலகையே உலுக்கியவை. இதிலிருந்து வெளிக்கொணர, அரசியல் அடக்குமுறையை கைவிட்டார் மலென்கோவ். பயத்தை நிறுவிய காவல்துறையை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதை வழிநடத்திய லாவ்ரெயீன்ட் பெரியாவையும் அகற்றினார்.
Add Comment