05 – கூட்டுப்பண்ணைகளும் குடிமுழுகிய விவசாயமும்
விடுதலை கிடைத்து விட்டது. லெனின் தலைமையிலான சோவியத்தைப் பிற நாடுகளும் அங்கீகரித்து விட்டன. விவசாயிகளின் நாடாக உலகெங்கும் சோவியத் ரஷ்யா அறியப்படுகிறது. அடுத்து என்ன? வல்லரசாக வேண்டும். ஆம். ரஷ்யாவை வல்லரசாக்க வேண்டும். இதைக் கனவு கண்டவர்தான், அடுத்து ரஷ்யாவின் ஆட்சியில் அமர்ந்தார்.
இயோசிஃப் விசரியோனோவிச் சுகஷ்விலி (ஜோசப் ஸ்டாலின்) – ஜோர்ஜியாவின் வறுமைக் குடும்பமொன்றில் 1878-ஆம் ஆண்டில் பிறந்த புரட்சியாளர். அவரது தோற்றமே தலைமைக்குரிய மரியாதையைப் பெற்றுத்தந்தது. வலுவான உடல்வாகு, தடித்த மீசை. முகத்தில் பெரியம்மையின் தழும்புகள். உயரம் குறைவு, அதை ஈடுகட்ட தீர்க்கமான கண்கள். இவரைக் கிறிஸ்தவப் பாதிரியாராக்க ஆசைப்பட்டார் தாய். குருத்துவக் கல்லூரியில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்குப் பதில், கார்ல் மார்க்ஸின் கம்யூனிசம் படித்தார். அவரது முரட்டுத் தோற்றத்திற்கு பாதிரியார் எல்லாம் செட் ஆகவில்லை. பட்டப்படிப்புக் கூட முடிக்காமல், வெளியேறி விட்டார். முழுநேரப் புரட்சியாளரானார்.
லெனினைப் பின்பற்றினார். தீவிர அரசியலில், அவருக்கு உறுதுணையாக வளர்ந்தார். மன்னராட்சியின் நாடு கடத்தப்படும் சடங்கில்தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். லெனினின் நம்பிக்கையைக் குறுகிய காலத்தில் பெற்றார். தெளிவான முடிவுகளை எடுப்பது; மன உறுதியுடன், நேரம் வரும்வரை காத்திருப்பது; கம்யூனிசத்தை எழுத்து மூலம் பரப்புவது போன்றவை அவரைத் தகுதிப்படுத்தின. இச்சமயம்தான் ஸ்டாலின் உருவானார். ரஷ்ய மொழியில் ‘ஸ்டால்’ என்றால் ‘எஃகு’ என்று பொருள். அவரைப் புண்படுத்தியவர்களை, வஞ்சம் வைத்துப் பழிவாங்கும் இயல்பும் சிறுவயது முதலே அவர் கொண்டிருந்தது. இவை போதாதா, லெனினின் கம்யூனிசக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியேற்க?
Add Comment