கொல்கத்தாவின் டிராம் போக்குவரத்து தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. டிராம் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. இந்தியாவில் கொல்கத்தா, பம்பாய், சென்னை, கொச்சின், நாசிக், கான்பூர், பாவ்நகர், உள்ளிட்ட இடங்களில் இந்தப் போக்குவரத்து இயங்கி வந்துள்ளது என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. அந்தப் பண்பாட்டு எச்சமாக மேற்கு வங்காளத் தலைநகரான கொல்கத்தாவில் மட்டுமே இன்று வரை அது இயங்கி வருகிறது.
மிகக் குறைந்த மக்கள் ஆதரவு, போக்குவரத்து நெரிசல், வேகம் இல்லை உள்ளிட்ட பல காரணங்களைக் காட்டி இந்த டிராம் போக்குவரத்தை நிறுத்த உத்தேசித்துள்ளது மேற்கு வங்காள அரசு. அம்மாநிலப் போக்குவரத்து அமைச்சரான ஸ்நேஹஷிஸ் சக்கரவர்த்தி, “பார்வைக்கும் பழக்கத்துக்கும் ஒன்றே ஒன்று இருக்கட்டும் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் பயன்படும் படி அம்மாநிலத்தின் முக்கிய பகுதியான எஸ்ப்ளனேட் வழித்தடத்தில் மட்டும் இதை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனச் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இந்த டிராம் சேவைகளை மேற்கு வங்காள டிராம் கழகம் (WBTC) நிர்வகித்து வருகிறது. சமீபத்தில் நடந்த மருத்துவர் கொலை வழக்கு சார்ந்த போராட்டங்கள் இன்னும் அங்கே நடக்கின்றன. அதனால், மக்களை இந்தச் செய்தி சரியாகச் சென்று சேரவில்லை என்கிறார் டிராம் காதலரான தீப்தாஸ். டிராம் ஆர்வலர்களும் கொல்கத்தா நகர டிராம் உபயோகிப்பாளர் சங்கமும் (CTUA) இணைந்து அரசின் இந்த முடிவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த முயற்சி எடுத்து வருகின்றனர். நாடெங்கும் பல நகரங்களில் இயங்கி வந்தாலும் அரசின் மெத்தனத்தாலும், அக்கறையின்மையாலும் மற்ற ஊர்களில் ஏற்பட்ட நிலை கொல்கத்தாவிற்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது அவர்கள் வாதம்.
Add Comment