கடந்த மார்ச் நான்காம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கோப்பையையும் வென்றது. ஆஸ்திரேலியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிரிகெட். ஆனால் இப்போது, தமிழக மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா என்றால் நினைவுக்கு வருவது, உயர்கல்வி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெறுவதைப் பார்க்க எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று படிப்பதும் அவர்களுக்குப் பிடிக்கும். தமிழக மாணவர்கள் என்றில்லை, இந்தியா முழுவதும் சேர்த்துக் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் இப்போது அங்குத் தற்காலிக விசா அனுமதியைப் பெற்றுள்ளனர்.
சிறிய கண்டமும், உலகிலேயே ஆறாவது பெரிய நாடுமான ஆஸ்திரேலியா 8.56 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. ஐரோப்பியர்கள் இத்தீவைக் கண்டடைவதற்கு முன்பு அங்கிருந்த பழங்குடியினர், ஆஸ்திரேலியா அபோர்ஜின்கள் என்றறியப்பட்டனர். அவர்கள் கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் வாழ்ந்து வந்தனர். பல இனக்குழுக்களாக இருந்தனர். அவர்களிடையே கிட்டத்தட்ட 250 மொழி வழக்குகள் பயன்பாட்டில் இருந்தன. பதினேழாம் நூற்றாண்டில் டச்சு பயணிகள் தீவை வந்தடைந்தனர். அத்தீவுக்குப் அவர்கள் சூட்டியப் பெயர் நியூ ஹாலந்து.
அதன் பிறகு அது பிரிட்டிஷ் குடியேற்றமாக ஆனது. 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்னும் பெயரில் அது கைதிகள் தங்கவைக்கப்படும் காலனியாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூடுதலாக ஐந்து காலனிகள் தன்னாட்சி பொறுப்போடு உருவானது. 1851 ஆம் ஆண்டு தற்போதைய சிட்னி நகருக்குச் சரியாக 210 கிலோமீட்டர் தொலைவில் தங்கம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடங்கி அடுத்த பல வருடங்களுக்குத் தீரத் தீர அங்குத் தங்கத்தை எடுத்தார்கள். உலகின் மொத்தத் தங்கத்தில், மூன்றில் ஒரு பங்கு அப்போது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியிலிருந்து மட்டுமே வந்தது. அது, பிரிட்டனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
Add Comment