19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972)
‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும் இந்தக் கவிதையை தமது வளர் பருவத்தில் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. இதனை இயற்றி அளித்தவர் தமிழகம் அளித்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர். இந்த அவரது கவிதை, காந்தியடிகள் அறிவித்த உப்புச்சத்தியாக்கிரகத்தின் போது தொண்டர்கள் நடைப்பயணத்தின் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டு நடப்பதற்காக எழுதியளித்த கவிதை. எளிய சொற்கள், அற்புதமான சந்தம், நெஞ்சையள்ளிக் கொண்டு போகும் பொருள்நயம் கொண்ட இந்தக் கவிதை உப்புச்சத்தியாக்கிரகம் முடிவதற்குள்ளாகவே அமரத்துவம் அடைந்த கவிதைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அவை மட்டுமல்ல, ‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ மற்றும், ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற வாக்கிய முழக்கங்களையும் அளித்தவர் இவரே.
Add Comment