28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947)
தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின் ஆழ அகலங்களுக்குள் போய், சுவரங்கள் அளவில் ஆய்வுகள் செய்து தமிழிலக்கியங்களில் பொதிந்துள்ள இசை நுணுக்கங்களை, பண் வகைகளை, சுவரப் பகுப்புகளைப் பற்றி ஆய்ந்தவர்கள். அப்படிப்பட்ட வெகுசிலரில் ஒருவர் இவர்; தனது தமிழிசை பற்றிய நூலின் முழுமை கருதி இவர் அதில் தோய்ந்த ஆண்டுகள் பதினான்கு. பதினான்கு நெடிய ஆண்டுகள் ஆய்வு செய்து இவர் உருவாக்கிய இசை நூல், தமிழிசை பற்றிய நூல்களில் இன்றளவும் குறிப்பிடத்தக்க முக்கிய நூலாக இருப்பதில் வியப்பில்லை.
தமிழிசை அறிஞராக மட்டுமல்லாது, இவர் அறிவியல் படித்த ஒரு ஆசிரியர். சிலப்பதிகாரத்தில் தோய்ந்த ஒரு தமிழிலக்கியவாதி. தமிழறிஞர் உலகம் கண்ட மிகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர். அத்துடன் முறையாகத் துறவறம் பெற்ற ஒரு துறவியும் கூட. துறவியின் கடமைகளையும் சமூகத் தொண்டுகளையும் இவற்றிற்கிடையில் சளைக்காது செய்தவர். ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பாடசாலைகளை நிருமாணித்தவர், அவைகளின் நிர்வாகி, ஆசிரியர், ஆய்வு, தமிழில் கலைச்சொல்லாக்கம், துறவு நிலை சார்ந்து மடங்களின் வழி தொண்டு என்று கூடவே பல இணைப்பணிகள். தனது வாழ்வு முழுதும் பயணங்களும், ஆக்கபூர்வமான காரியங்களைச் சாதித்ததுமான வாழ்வு இவரது வாழ்வு. அத்தனையும் தனது குறைந்த ஆயுளான 50 ஆண்டுகளுக்குள் சிறப்பாகச் செய்திருக்கிறார் இவர் என்று சொன்னால் வியப்பேற்படும்தானே? ஈழம் கண்ட சிறந்த தமிழறிஞர்களில், தமிழிசைவாணர்களில் முக்கியமானவர் இவர். யாழ்நூல் என்ற இசைநூல் கண்ட சுவாமி விபுலானந்தர் இந்தப் பகுதி உயிருக்கு நேர் நாயகர்.
Add Comment