24 கவியோகி சுத்தானந்த பாரதி (11.05.1897 – 07.03.1990)
ஒருவர் இருபது ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947’இல் தனது மௌனவிரதம் கலைத்துப் பேசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமின்றி இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமான நூலான ஒரு நூலில் 50,000 பாடல்கள் இருக்கின்றன என்றால்? அந்த நூல் தேசத்தை உருவகமாகக் கொண்ட பாரதமாதா சக்தி மாலை என்ற பெயரில் எழுதப்பட்டது என்றால்? தோராயமாக அவர் அறிந்திருந்த அனைத்து மொழிகளிலுமாகச் சேர்த்து 1000 நூல்கள் எழுதியிருக்கிறார் என்றால்? தான் வாழும் காலத்தில் கவியாகவும், யோகியாகவும் புகழப்பட்டவர் என்றால்? ஒரே மனிதர் இலக்கியம், மெய்யியல், கவிதை, காப்பியம், நாடகம், திரைப்படம், திரைப்பாடல்கள், யோகம், சமூகம், தமிழிசை, இதழியல் என்று அனைத்துத் துறைகளில் இயங்கியிருக்கிறார் என்றால்? எப்படிப் பாடினரோ, அடியார், அப்படிப் பாடிட நான் ஆசை கொண்டேன்’, ‘ அருள் புரிவாய் கருணைக் கடலே’, ‘சகலகலா வாணியே’, ‘கருணை செய்வாய்-கஜவதனா’, ‘அருவியைப் போலும், காலைக் குருவியைப் போலும் அருளை நான் பாடுகின்றேன்’.. போன்ற புகழ்பெற்ற திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர்தான் என்றால்? இவரது பாடல்களுக்கு தமிழிசை விற்பன்னர்கள் டைகர் வரதாச்சாரியார், பொன்னையா பிள்ளை, தண்டபாணி தேசிகர், கோமதி சங்கரர் போன்றோர் சுவரம் அமைத்திருக்கிறார்கள் என்றால்? மதுரை சுந்தரவடிவு சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், பி.யு.சின்னப்பா, எம்.எல்.வசந்தகுமாரி, சிதம்பரம் செயராமன் போன்ற புகழ்முகமான பாடகர்கள் இவரது பாடல்களைப் பாடியிருக்கிறார்கள் என்றால்? திருக்குறளுக்கு அடுத்து குறள் வெண்பா வடிவில் புகழ்பெற்ற ஒரு அறநூலை ஆக்கியவர் இவர்தான் என்றால்?… எத்தனை நம்ப இயலாத அரிய சாதனைச் செய்திகள்!
இத்தனை புகழுக்கும் உரியவரும், 93 ஆண்டுகள் நெடிது வாழ்ந்த தனது பிரம்மச்சரிய வாழ்க்கையில் தனது இறப்பையும் ஒரு வருடம் முன்பே முன்னுரைத்து மறைந்தவருமான கவியோகி சுத்தானந்த பாரதியே இந்த வார உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.
Add Comment