133. மூன்றும் ஒன்றும்
சார்வாகனே கேள். படைக்கப்பட்ட அனைத்தினும் மிகப்பெரிய அதிசயமொன்று உண்டென்றால், அது மனிதனின் சிந்தையே ஆகும். எது இல்லாவிடில் வேறெதுவுமில்லையோ, அதையே நாம் பூதம் என்கிறோம். மனிதச் சிந்தை அதன் இயல்பை ஏந்தியுள்ளதென்பதை உணர்வாய். புலன்களைக் கொண்டு அறியவியலாத எது ஒன்றையும் நீ ஏற்பதில்லை என்பது அப்படியே இருக்கட்டும். உன் புலன்களைக் கொண்டு உன்னுள் உறையும் பூதத்தையே நீ அறியாதிருப்பதை எண்ணிப் பார். உள்ளே உற்று நோக்கத் தெரியாமல் உலகை நோக்கி என்ன பயன்?
கருவூர்ச் சித்தர் இதனைச் சொன்னதும் சார்வாகன் அவரது தாள் பணிந்து சொன்னான்,
ஏற்கிறேன் ஐயனே. பிழை என்னுடையதுதான்.
பிழையில்லை சார்வாகனே. இதன் பெயர் அறியாமை. இது ஒரு பிழையென்று உனக்குப் பிழையாகச் சுட்டிக் காட்டுவதும் உன் சித்தமேதான்.
சிறு பிராயத்தில் சாலைக்குச் சென்று கல்வி பயின்றிருந்தால் ஒருக்கால் தெளிந்திருப்பேனோ?











Add Comment