154. குற்றப் பெரும்பெயல்
திருவீர நாராயணபுரத்து ஏரி, பெருங்கடலினைப் போலத் ததும்பி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. வீறு கொண்ட சூறை, கரையோர மரங்களையெல்லாம் முறித்து வீழ்த்திக்கொண்டிருந்தது. பெரும்பெயலின் இடையே விநாடிக்கொரு முறை கேட்ட இடிச் சத்தம் வெளியெல்லாம் நிறைந்து அதிர்ந்தது. கண்ணெட்டும் தொலைவெல்லாம் ஒளிர்ந்து மறைந்த சஞ்சலை, தீக்கங்காகக் கீழிறங்கி வந்து அச்சுறுத்தியது.
ஓடத்தில் இருந்த சதுர்வேதி மங்கலத்தார் நால்வரும் வேட்டன் எறிபத்தன் எனும் அப்புதியவனை உடன் ஏற்றிக்கொண்டதில் சிக்கலேதும் வர வாய்ப்புண்டா என மீண்டும் மீண்டும் தமக்குள் சமக்கிருத மொழியில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். கவனமாக அவர்கள் வேட்டனின் பெயரைக் குறிப்பிடுவதையும் தவிர்த்தார்கள். வேட்டன், அவர்கள் தம்மை அங்கீகரித்து ஓடத்தில் ஏற்றிக்கொண்டதே பேருதவி என்று வணங்கி நன்றி சொல்லிவிட்டு ஓடத்தின் பின்புறம் சென்று குத்திட்டு அமர்ந்துகொண்டான். மற்றும்படி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று உற்றுக் கேட்கவோ ஆராயவோ அவன் விரும்பவில்லை.
சகோதரர்கள் நால்வரும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு அவன் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தனர். அவனது சரணாகதியைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்வதன் பொருட்டு, மலையனூரான் என்னும் இரேவதாசன் கிரமவித்தன், தன் கரங்களைத் தட்டி ஒலியெழுப்பி வேட்டனை அருகே வர அழைத்தான்.











Add Comment