Home » உரி – 161
உரி • நாள்தோறும்

உரி – 161

161. வரமும் சாபமும்

அலை பெருகிச் சுழித்தோடிக்கொண்டிருந்தது ஆன்பொருநை. கரையோரம் அடர்ந்திருந்த நாணற் புதர்களுக்கு அப்பால் சற்றுத் தள்ளித் திட்டுத் திட்டாக அடர்ந்திருந்த போந்தை வனத்தின் நடுவே சிறிய குடிசை ஒன்று இருந்தது. வேலிப் படலிட்டுப் படலெல்லாம் கொடி படர்ந்திருந்த அக்குடிசையின் கூரையின் மீதும் மலர்க் கொடிகள் அடர்ந்து படர்ந்திருந்தன. குடிசையின் முன்புறமும் பின்புறமும் பாத்தி வெட்டிக் கீரை பயிரிட்டிருந்தார்கள். பசேலென அடர்ந்திருந்த கீரைப் படப்பையின் ஓரத்தில், ஒரே வித்தினின்று முளைத்தாற்போல ஆறு போந்தைகள் எழுந்து குட்டையாக அடர்ந்து கவிந்து நிற்க, அதனடியில் அமைக்கப்பட்டிருந்த கல்லினாலான நீண்ட படுக்கையில் சார்வாகன் கால் நீட்டிப் படுத்திருந்தான்.

நான் அவனது சிந்தையைக் கருதி இடம் பெயர்ந்து வந்து இரண்டு நாழிகைகள் கடந்திருந்தன. அவ்விரு நாழிகைப் பொழுதும் அவன் கை கால்களைக் கூட அசைக்காமல் ஒரு சிலையைப் போலவே கிடந்தான். மூச்சிருந்தது என்பது தவிர, அவனது அசைவறு நிலை அச்சமூட்டக்கூடியதாகவே இருந்தது. அவன் உறங்கவில்லை. விழித்துத்தான் இருந்தான். எதையேனும் சிந்தித்துக்கொண்டும் இல்லை; சிந்தையைப் பாழ்வெளியாக்கிக்கொண்டும் இருக்கவில்லை. தனக்குள் அவன் ஒரு வினோதமான தோற்றத்தை வார்த்தெடுத்துக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த முயற்சி செய்துகொண்டிருந்ததை உணர்ந்தேன்.

நொடிப் பொழுது அது அவன் தவத்தில் கண்ட அவனது தாயின் கருவறையின் உட்புறமாக இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் மீண்டும் அதனை அவன் நினைவுகூர அவசியமிருக்காதெனவும் தோன்றியது. பரபரவென நான் அங்கில்லாத போதில் அவன் என்னவெல்லாம் சிந்தித்துச் சேமித்திருந்தான் என்று அளைந்து படித்தேன். புதிதாக ஒன்றுமில்லை. தஞ்சப்புரியின் அம்மாயப் படித்துறையை விட்டு நீங்கியவன் நேரே வஞ்சிமாநகருக்குத்தான் வந்திருக்கிறான். ஆனால் கருவூர்ச் சித்தர் அங்கே இல்லை. எங்கிருந்தாலும் இங்கே வந்து சேருங்கள்; அவசரம் என்று உரத்த குரலில் வெளி நோக்கி அறிவித்துவிட்டு, ஆன்பொருநையின் கரையிலேயே கால் நீட்டிப் படுத்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!