பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மத்திய அரசு பிறப்பித்த அவசரநிலையை அங்கீகரித்துள்ளது அந்நாட்டு நாடாளுமன்றம். இதனால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆட்சி வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அம்மாகாணத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மாகாண அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆளுநரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் பாகிஸ்தான் மீதான அசிம் முனிரின் முழுமையான மேலாதிக்கத்துக்கு இருந்த கடைசி தடையும் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, அம்மாகாணத்தை ஆளும் பிடிஐ அரசு இஸ்லாமாபாத்துக்குப் பேரணியைத் தொடங்கியிருந்தது. இந்தச் சமயத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது தற்செயலானதல்ல. சட்டம்-ஒழுங்கு, தீவிரவாதக் கட்டுப்பாடு எனப் பல கதைகளைப் பாகிஸ்தானிய அரசு புனைந்தாலும் அதன் உள்நோக்கம் வேறு.
முரண்பாடுகளின் மொத்த உருவமான பாகிஸ்தானில், என்றும் மாறாத அம்சமாக உள்ளது ராணுவத்தின் மேலாதிக்கம். ராணுவத் தலைமையுடன் உரசிய எந்த அரசியல் தலைமையும் வென்றதாக வரலாறு இல்லை. ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்சாவை பிரிட்டனுக்கு நாடுகடத்தினார் அயூப்கான். பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோவைத் தூக்கிலிட்டார் ஜெனரல் ஜியா-உல்-ஹக். முஷாரஃபுக்கு அஞ்சி சவுதிக்கு ஓடினார் பிரதமர் நவாஸ் ஷெரீப். அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, இப்போது அசிம் முனிரின் கையில் சிக்கியுள்ளார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.















Add Comment