163. கலினம்
அன்றைக்கு உதுமானி நாயனார், சார்வாகனுக்கு மனித குலமென்னும் ஆதித் தனிமத்தின் பெரும் படைப்பின் பின்னே உள்ள பல மறைமெய்களைத் திரை விலக்கிக் காட்டியிருக்கிறார். நானறிந்த சார்வாகன் பொதுவாக அத்தகைய விளக்கங்களைச் செவிகளின் வாயிலிலேயே நிராகரித்துத் தள்ளிவிடக் கூடியவன். ஆனால் நாயனார் பேசியபோது அவன் கூடியவரை குறுக்கிடவேயில்லை என்பதை அவனது சிந்தையில் கண்டறிந்தபோது சிறிது வியப்பாக இருந்தது. அவர் சொன்ன அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இறுதியில்தான் அவன் நிராகரித்திருக்கிறான். அதையும் அவன் அமைதியாகவே செய்திருக்கிறான் என்பது வினோதமாகவே தென்பட்டது.
உதுமானி நாயனார் அவனது ஐயங்களைத் தெளிவிக்கத் தேர்ந்தெடுத்திருந்த புள்ளி மிகவும் அபாயகரமானது. ஓர் எல்லைக்கு மேலே அதன்மீது நின்றுகொண்டு வாதம் புரிய இயலாது போய்விடும். ஆயினும் அவர் தன்னை நம்பியது போலவே சார்வாகனது உள்வாங்கும் திறத்தையும் நம்பியிருக்கிறார். அதனால்தான் அவர் மீறலென்னும் மனித குலத்தின் ஆதாரப் பண்பில் தனது எண்ணங்களைக் கோத்துக் கட்டத் தொடங்கியிருக்கிறார்.
அன்பனே, படைப்பில் சிறந்தது மனித குலமென ஒப்புக்கொள்வதில் நமக்குள் பேதமிராதென எண்ணுகிறேன். ஆனால் அச்சிறந்ததன் கட்டமைப்பு ஆக மோசமானதொரு குணத்தினால் ஆனதென்பதைக் கவனி,
என்று அவர் சொன்னார்.
சொல்லுங்கள் ஐயனே.
மீறலென்று அதனை வரையறுப்பேன். எதிலும். எல்லாவற்றிலும். எப்போதும். எக்காலத்திலும். எந்தச் சூழ்நிலையிலும். என்றென்றும் மனித மனமென்பது விதி மீறலின் மீதே தீராப் பற்று கொண்டது.











Add Comment