எப்போது அவன் தத்தன் மயங்கிக் கிடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் என்று கவனிக்கவில்லை. ஆனால் மீண்டும் நான் அவனைக் கருதியபோது அங்கேதான் இருந்தான். அந்த நொடியே அவன் சிந்தைக்குள் பரவி நிறைந்தேன் எனினும் அதனை ஒரு கடமையாக எண்ணிச் செய்தேனே அன்றி, விதுப்பு ஏதுமில்லை.
எதுவும் முதல் முறையல்ல. எதுவும் முன்னனுபவம் அற்றதல்ல. அவனே வழங்கும் விவரங்களன்றி அவனைக் குறித்து ஏதும் அறிய இயலாதென்ற தெளிவு ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் அது அளித்த ஆர்வமும் முறியடிக்கும் விடாயும் இப்போது எனக்கில்லை. நான் தெளிவாக இருந்தேன். அவன் அளவுக்கே எனக்கும் இது சார்ந்த தெளிவு உண்டாகியிருந்ததை விழிப்புடன் கவனித்தேன். அவனைப் பற்றி நானறிந்ததெல்லாம், கூடுதலாக எதையும் அறிந்துகொள்ள இடம் தராதவன் என்பதாகவே இருந்தது. அதனாலென்ன. உண்மையென்பது கூடுதல் குறைவற்றது. எல்லா உண்மைகளும் நாம் தேடும் உண்மைகளாகாதென்பது இதற்குத் தொடர்பற்றதாகத்தான் இருக்க வேண்டும்.










Add Comment