48. தோன்றலும் துலங்கலும்
எப்போதும் நான் சித்தம் கலங்கி நின்றதில்லை. ஆனால் இப்போது ஏன் தெளிந்தாற்போல இருக்கிறது? புலப்படுவது வேறு. துலங்குவது வேறு. தரிசனமென்பது முற்றிலும் வேறு. இது இம்மூன்றாகவும் இல்லாமல் இன்னொன்றாக இருக்கிறது.
நான் ஒரு மனிதனின் சிந்தையைக் கருதினேன். அது என்னைத் தீண்ட முயன்றது காரணம். ஆனால் நான் கருதிய சிந்தையில் தவமில்லை. தவமற்ற ஒரு சிந்தை என்னையல்ல; என்னைத் தன் கருவில் ஏந்திய ஆதித் தனிமத்தை நெருங்கவும் வழியில்லை.
அது புலப்பட்ட தருணத்தில்தான் உதுமானி நாயனார் என்கிற மனிதர் எனக்குத் தெரிய வந்தார். நான் அகழ்ந்துகொண்டிருந்த சார்வாகனின் சிந்தையைத்தான் அவரும் கருதினார். ஆனால் சிந்தையை மட்டுமல்ல. செயல்களையும். நேரடியாக அல்ல. தனது மாணாக்கர்களின் வாயிலாக. ஒரு சித்தர். ஒரு தேசாபிமானி. ஒரு ராஜ விசுவாசி. பொருத்தமற்ற இம்மூன்றாகவும் ஒரு மனிதப் பிறவி இருக்க முடியுமென்று அவரிடம் கண்டேன். ஓ. பொருத்தமற்ற என்று சொல்லிவிட்டேன். அது என் கருத்து. நானறியாப் பொருத்தங்கள் ஏதேனும் இருக்கலாம். அது எனக்கு அத்தனை அவசியமல்ல. அதனினும் முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்றை நான் அவரது சிந்தைக்குள் இருந்துதான் கண்டறிந்தேன்.










Add Comment