தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகரின் விஜய்யின் விஸ்வரூப வெற்றி, இலங்கையில் கலவையான உணர்வுகளைத் தோற்றுவித்து இருக்கிறது.
விஜய்யைப் பக்தி சிரத்தையாய் வழிபடும் ரசிகக் கண்மணிகள், அவர் தமிழகத்தில் நல்லாட்சி தருவார் என்றும், தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களையும் அரவணைத்துக் கொள்வார் என்றும் கூறிக் கொண்டு இனிப்பு வழங்கியும், வெடி கொளுத்தியும் வடக்கையும் கிழக்கையும் மலையகத்தையும் அதகளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒருபடி மேலே சென்ற சில தொண்டர்கள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத் துண்டை அணிந்து கொண்டு வீடுவீடாகப் போய், ‘இனி எல்லாம் தளபதி தான், அவர் தமிழகம் தாண்டி தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் கால் பதிக்கப் போகிறார். உங்கள் பிரச்சினை என்ன, கிணறு வெட்டித் தரட்டுமா, தையல் மெஷின் தரட்டுமா, சொல்லுங்கள்’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மேலும் உத்வேகம் கொடுக்குமளவுக்கு அமைந்துவிட்டது பதவியேற்பு விழா. அந்த விழாவில் விஜய் பேசிய விதம் முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமாக இருந்தது. இப்போதைக்கு நடக்கும் காட்சிகள் எல்லாம் அவரை நடிக்கக் கூப்பிட்டு அவர் மறுத்த முதல்வன் திரைப்படம் போல இருக்கிறது. அன்று திரையில் செய்யாததை இன்று தலைவன் தரையில் செய்கிறான் என்று ஆர்ப்பரிக்கிறது ரசிகப் பட்டாளம்.















Add Comment