68. ஒன்றும் பலவும்
ஒன்றைக் கவனித்தீர்களா? இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வரும்போது ஏராளமான இடங்களில் நான் குறுக்கிட்டு விளக்கம் தர வேண்டியிருந்தது. முதல் முதலாக இப்போதுதான் நான் இடைப்புக வேண்டிய அவசியமே நேராமல் வேட்டன் எறிபத்தனின் கதையை அவன் சிந்தையில் சேமித்திருந்த விதமாகவே விவரிக்கத் தொடங்கினேன். ஓ, என் அரிய ஊழ் அதிலும் தன் இயல்பைக் காற்றோடு நிறைந்து வரும் செந்நெல் நெடியென நிறைக்கத் தொடங்கிவிட்டது.
கச்சி மாநகரிலிருந்து கருவூருக்கு வேட்டனின் குடும்பம் வந்து சேர்ந்தது முதல், அவன் கருவூரிலிருந்து புறப்பட்டுக் குன்றாண்டார் கோயிலுக்குச் சென்று மயூரமுகியைச் சந்தித்து மீள வந்த தருணங்கள் வரை இடையூறில்லாமல் அவனது சிந்தையை என்னால் படித்தறிய முடிந்தது. ஆனால் சித்தர் அவனை ஆறை நகரத்துக்குச் செல்லச் சொன்னது அவனது வாழ்வின் தலையாய சம்பவம். அங்கேதான் அவன் புண்ணியகுமார சோழனைச் சந்தித்தான். அப்போதுதான் அவனுக்கு அரசப் பதவி கிடைத்திருக்கிறது. குறுநிலத்தின் சிறு நிலமொன்றின் தலைவனாகத் தன் பணியை அவன் தொடங்கியிருக்கிறான். பிறகு எப்போது, எதனால் அவனுக்கும் சோழனுக்கும் பகை மூண்டதென்று தெரியவில்லை. பகை வளர்ந்து பெரிதான காலத்தில் அவன் புகழும் பெருகி அன்றைய சோழக் குறுநிலமெங்கும் அறியப்பட்டவனாயிருந்திருக்கிறான். ஏதோ ஒரு தருணம். ஏதோ ஒரு காரணம். சிக்கலொன்று உருவாகிப் பெரும்புயலென உருவெடுத்து அவன் வாழ்வைச் சூறையாடியிருக்கிறது. மன்னன் அவனை இரு துண்டங்களாக வெட்டி வீசிவிட்டுச் சென்றான். சோழத்துக்கு அவன் இறந்தவனானான். துண்டமான பகுதிகளை மயூரமுகி எடுத்து ஒட்டி வைத்த கணத்தில் அவன் உயிர்பெற்று எழுந்தான். மரணமற்ற பெருவாழ்வு தன் வாழ்வில் ஊடாடும் விதத்தினை அன்று இரண்டாம் முறையாக அவன் அறிந்துணர்ந்தான்.









Add Comment