77. புதிராட்டம்
இவனுக்காக அவனும் அவனுக்காக இன்னொருவனும் இன்னொருவனுக்காக வேறொருவனும் எங்கெங்கோ கண்காணாத் தொலைவுகளில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் வினோதக் கட்டமைப்புக்குள் மீண்டுமொரு முறை புகுந்து ஆராய்ந்துப் பயனில்லை என்று தோன்றியது. நான் அறிந்துகொள்ள விரும்பியதெல்லாம் ஒன்றுதான். சார்வாகனின் அதரம் திறந்து உதிரும் சொற்களனைத்தும் மாயமுனியினுடையதுதான் என்றால், அவன் ஏன் இப்படித் தடம் மாறிச் சிந்தித்து அனுப்புகிறான்? கருவூர்ச் சித்தரும் உதுமானி நாயனாரும் அவரது மாணாக்கர்களும் சதிக் கூட்டமெனச் சுட்டுவது அவனைத்தான். அவனது கூட்டத்தாரைத்தான். எனில், அவன் எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்வான்? ஒருக்கால் ஒப்புக்குச் சொல்கிறானா? சித்தரின் செயல்வேகத்தைத் தடுக்கவோ குறைக்கவோ நினைத்து அப்படிச் சொல்கிறானோ என்றும் ஐயம் உண்டானது. உண்மை எதுவோ அதை அறிந்துகொண்டாலொழிய அடுத்த அடியை எடுத்து வைக்க இயலாதெனப் புரிந்தபோது நான் மீண்டும் வேட்டன் எறிபத்தனைக் கருதி அவனது சிந்தைக்குள் புகுந்து அகழ முடிவு செய்தேன்.
ஒன்றைச் சொல்ல வேண்டும். வேட்டனின் சிந்தையை அகழ அவசியமே இல்லை. காலம் பிசகாது ஒன்றன் மீது ஒன்றென வத்திரங்களை மடித்து வைத்தாற்போல அவனது நினைவுகள் சேகரமாகியிருக்கும். எடுத்துப் படித்தறிய முனையும்போது விரித்து வைக்க நேரிடுவதுகூட அவனது சிந்தைக் கட்டமைப்பைக் குலைக்கிறோமென்ற குற்ற உணர்வை உண்டாக்கும். சார்வாகனைப் போல, மாயமுனியைப் போல, மந்திரவாதியைப் போல அவனும் தனது சிந்தையை வேறிடத்தில் வைத்துவிட்டு, வேறொருவர் சிந்தைக்கு வாயசைப்பவனாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டிருந்தான் என்றால் இப்பெருங்கதை அதன் முதல் சொல்லோடு முடிவடைந்திருக்கும்.
ஆனால் அவனது அறிவின் கூர்மை வியப்புக்குரியதுதான். மிகக் கவனமாக அவன் தனது எண்ணங்களின் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து மயூரமுகியின் சிந்தையில் பத்திரப்படுத்தியிருக்கிறான். முன்பொரு சமயம் இது குறித்து விவரித்திருக்கிறேன். அதுவல்ல. வேறு எதுவுமல்ல. இக்கணம் எனக்குச் சார்வாகன் பேசியதன் பின்புலம் தெரிந்தாக வேண்டும். மற்றவை பிறகென்று முடிவு செய்து வேட்டனைக் கருதினேன்.









Add Comment