அடர்ந்ததொரு காடு. கழுத்தைச் சுளுக்க வைக்கும் மகோகனி மரங்கள். சுற்றிலும் நிறைந்திருந்த ‘சனாகா’ நதியின் சலசலப்பு. இடைக்கிடையே மரங்களில் மோதப் பார்க்கும் வௌவால்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு க்யூட்டான சிம்பன்ஸிக் குடும்பம்! மத்திய ஆப்பிரிக்காவின் கமரூன் நாட்டின் அயனமண்டலக் காலநிலையை அனுபவித்தபடி பிள்ளை குட்டிகளென அளவளாவிக் கொண்டிருந்தது அந்த சிம்பன்ஸிக் கூட்டம். அதில் ஒரு பாலகன். இரண்டே வயதுதான். தாயை விட்டுக் கொஞ்சம் தூரம் போயிருந்தான்.
திடீரென்று பயங்கரமானதொரு ஓசை கேட்கிறது. அதிர்ச்சியில் மூர்ச்சையான குட்டிக் குழந்தை கண்களை மிகுந்த கஷ்டத்துடன் திறந்து பார்க்கிறான். “வெல்கம் டு யூ எஸ் ஸ்பேஸ் ப்ரோக்ராம்” என்கிறார்கள்! சிம்பன்ஸிக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள் நாஸாவினர்! சம்பவம் நிகழ்ந்தது 1959-இல்!
ஆம், ஏராளமான சிம்பன்ஸிக் குட்டிகளைப் பிடித்து வந்து, பயிற்சிநெறியை ஆரம்பித்து விட்டார்கள். ‘காஸ்மோசிம்ப்’ எனப்படும் விண்வெளி சிம்பன்ஸி ஆவதற்கான பயிற்சிநெறி. நமது கமரூன் நாட்டுக் குட்டிக்கு ஆசையாக Ham- ஹாம் என்று பெயர் சூட்டுகிறார்கள். கொண்டு வந்த குட்டிகளிலேயே ஹாம் நல்ல புத்திசாலி.
Add Comment