“செவிப் பொன் சேர்ப்பு விழா” என்றொரு அழைப்பிதழ். குழந்தைக்குக் காதுகுத்தி அணிசேர்க்கும் நிகழ்வு. மனிதர்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்வதற்காக ஆதிகாலம் தொட்டே நாடி வருபனவற்றுள் முதன்மையானவை அணிகலன்கள். உலகெங்கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் தங்களின் வரலாற்று நினைவாகவும் அணிகலன்களைப் பாதுகாத்து வருகின்றன.
காலந்தோறும் அணிகலன்கள் செய்யப்படும் முறைமையும், வடிவங்களும், செய்பொருட்களுமேகூட மாறிக்கொண்டேதான் வந்துள்ளன. காலத்திற்கு ஏற்பக் கோலம் என்றிருப்பது தானே மனிதகுலத்தின் இயல்பு.?
ஆரம்பத்தில் அழகுக்கு மட்டுமே என்றிருந்தன அணிகலன்கள். பின்னாட்களில் அவை பயன் சார்ந்தவை என்னும் எல்லையை வந்தடைந்தன. உதாரணமாக, கண் பார்வை தெளிவாகத் தெரிவதற்காக மூக்குக் கண்ணாடி, காலத்தைத் துல்லியமாய்க் காட்டிட கைக்கடிகாரம், இன்னபிற.
இன்றைய காலம் டிஜிட்டல் காலம். எல்லாமே டிஜிட்டல் என்றான பின் அணிகள் மட்டும் எவ்வாறு விதிவிலக்காக இயலும்? நம் உடலுடன் ஒட்டி உறவாடும் தொழில்நுட்பக் கருவிகள் நிறையவே வந்துவிட்டன. அணியும் வகையிலான தொழில்நுட்பம் இவை என்பதால் “அணி நுட்பம்” என்றே கூட இவற்றை அழைக்கலாம்.
“அதெல்லாம் முடியாது பாஸ்…” என்பவரா நீங்கள்? “வேரபில் டெக்” என்றே சொல்லிவிட்டுப் போங்கள்.
Add Comment