உலகைச் சுற்றி வருதல் மனிதரின் ஆதி ஆசைகளில் ஒன்று. இப்போது இந்தியாவில் இருந்து இரு பெண்கள் அந்த ஆசையுடன் கிளம்பி இருக்கிறார்கள். இதற்கு முன்பும் இந்தியப் பெண்கள் சிலர் உலகைச் சுற்றி வந்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரை பல நாடுகள் கடற்பயணிகளால் கண்டுபிடிக்கப் பட்டவைதாம். வான்வழிப் போக்குவரத்து வரும்வரை, கடல் தாண்டிப் போய் பொருளீட்டிக் கொண்டு வருவது பெருஞ்செயலாகப் பார்க்கப் பட்டது. ஆனால் இப்போதும் கடலில் உலகைச் சுற்றி வருவது சாதனைதான். அவ்வப்போது இந்தியாவிலும் இப்படியான முயற்சிகள் நடக்கின்றன.
2017-ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையும், நேஷனல் ஜியோகிராபிக் சேனலும் சேர்ந்து கூட்டாக ஒரு திட்டத்தை முன்வைத்தன, ‘நாவிகா சாகர் பரிக்ரமா’ (நாவிகா-பெண் மாலுமி, சாகர்-கடல், பரிக்ரமா-சுற்றுதல்). இத்திட்டத்தின்படி ஒரு கப்பலில், உதவியாளர்கள் யாரும் இல்லாமல் பெண்கள் மட்டுமே பயணம் செய்து உலகைச் சுற்றி வர வேண்டும்.
சுற்றி வருதல் என்றால், பூமியைச் சுற்றி 21600 நாட்டிக்கல் மைல்களைக் (சுமார் 40,000 கிலோமீட்டர்) கடந்து, பூமத்திய ரேகையையும், மூன்று முனைகளையும் (லூவீன் முனை, புயல் முனை, நன்னம்பிக்கை முனை) எல்லா தீர்க்க ரேகைகளையும் கடந்து தொடங்கிய இடத்திற்கே திரும்ப வர வேண்டும். இதுபோன்ற ஒரு சாகசப் பயணத்தை, வழிகாட்டிகள் மாலுமிகள் இல்லாமல் இந்தியப் பெண்கள் தனியாக மேற்கொண்டது இல்லை.
Add Comment