20. நாட்டுக் கடமை
கோகலே அன்பான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் மற்றவர்கள் செய்த தியாகத்தால் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தவர். அதனால், அவருக்கு ஏகப்பட்ட வீட்டுப் பாசமும், அவர்களுக்காக உழைக்கவேண்டும், அவர்களை நன்கு பார்த்துக்கொள்ளவேண்டும், அவர்கள் கொடுத்ததை ஒரு மடங்குக்குப் பத்து மடங்காகத் திருப்பித் தரவேண்டும் என்கிற எண்ணமும் அவருக்குள் இருந்தது.
அதே நேரம், அவர் வேலை செய்த பள்ளியிலும் கல்லூரியிலும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் பலர் வீட்டுப் பாசத்துக்கு மேலாக நாட்டுப் பாசத்தை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். அதாவது, நாம் நம்மை நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒப்புக்கொடுத்துவிடவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.
இந்தத் துடிப்பான இளைஞர்களுடைய சிந்தனை பொதுவாக இப்படி இருந்தது: நம் நாடு மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் அது இன்னும் நலிந்துவிட்டது. மக்கள் படிப்பதற்கோ வேலை செய்வதற்கோ தொழிலைத் தொடங்கி நடத்துவதற்கோ சரியான வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறுகிறார்கள். சமூகத்தில் ஏராளமான சிக்கல்கள், துன்பங்கள், முன்னேற்றத்துக்கான தடைகள் உள்ளன. இதையெல்லாம் சரி செய்யவேண்டுமென்றால், நாம் நம்முடைய தனிப்பட்ட இன்பத்தை, வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், நமக்காக, நம் குடும்பத்துக்காகப் பணம் சம்பாதிப்பதை, சொத்து சேர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல், சொந்தத் தேவைகளைக் குறைத்துக்கொண்டு நாடுதான் முதன்மையானது என்று கருதிக் கடுமையாக உழைக்கவேண்டும். பதிலுக்கு நமக்கு என்ன கிடைக்கும் என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது, எதையும் எதிர்பார்க்கக்கூடாது. சேவைதான் என்னுடைய கடமை என்கிற நம்முடைய இந்த மனநிலைதான் வளமான இந்தியாவை வளர்க்கும்.










Add Comment