வாராவாரம் கோலாகலமாகச் செயற்கை நுண்ணறிவுச் செய்திகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருந்தன அல்லவா… இந்த வாரம் செய்திகளுக்கே டிவிஸ்ட் வைத்து புதிய தகவலொன்றை வெளியிட்டார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.
கூகுள் செய்திகள் சேகரிப்புக்காக மட்டும் பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுச் (AI) செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது, இது பத்திரிகையாளர்கள் செய்திக் கட்டுரைகளை விரைவாகவும் திறமையாகவும் எழுத உதவுகிறது. இப்போதைக்கு நிறுவனத்திற்குள்ளாக “ஜெனிசிஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலி, இன்னும் ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியில் உள்ளெதென்றாலும், செய்திகளை உருவாக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டதாகவே நம்பப்படுகிறது.
முதற்கட்டமாக செய்திக் கட்டுரைகள், சமூக ஊடக இடுகைகள் மற்றும் பொதுப் பதிவுகள் உட்பட பெரிய அளவிலான தரவுகளை ஜெனிசிஸில் உள்ளிடுகிறார்கள். அது புதிய செய்தி உள்ளடக்கத்தை உருவாக்க இந்தத் தரவைப் பயன்படுத்துகிறது. இந்தச்செயலியால் தலைப்புச் செய்திகள், செய்திச் சுருக்கங்கள் மற்றும் முழு நீளக் கட்டுரைகளையும் கூட எழுத முடியும்.
வழக்கம்போல ஓதப்படும் மந்திரமாக “ஜெனிசிஸ் பத்திரிகையாளர்களைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக அவர்கள் தங்கள் வேலைகளை இன்னும் திறம்படச் செய்ய உதவும்” என்று சுக்லாம் பரதரம் குட்டி கூகுள் இச்செய்தியை வெளியிட்டிருந்தாலும், இதன் பின் இருந்த உள்ளார்ந்த உண்மையை அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.
Add Comment