நாமகரணம்
வாஸ் வடிவமைத்த சர்க்யூட் வேலை செய்தது. ஜாப்ஸுக்கும் அது பிடித்திருந்தது. பணமும் தயார். ஜாப்ஸின் பஸ்ஸும், வாஸின் கால்குலேட்டரும் காசாகியிருந்தன.
அடுத்த கட்டம் ஒரு நிறுவனம் தொடங்குவது. என்ன பெயர் வைப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தனர் இரண்டு ஸ்டீவ்களும். ‘மேட்ரிக்ஸ்’, ‘எக்ஸிக்யூட்டெக்’ இப்படி விதவிதமாக யோசித்துப்பார்த்தனர். எதுவும் பிடிக்கவில்லை. டெக்னிகலாக இருந்தாலும் ஜாப்ஸுக்கு இப்பெயர்கள் போரடித்தன.
பெயரை முடிவு செய்ய நீண்ட நாள் செலவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஜாப்ஸ். நிறுவனத்தைப் பதிவு செய்வதை அவர் தாமதிக்க விரும்பவில்லை.
வாஸிடம் இன்னும் இரண்டு சர்க்யூட் டிசைன்கள் கேட்டிருந்தால் கூடச் செய்து முடித்திருப்பார். ஆனால் பெயர் வைப்பதெல்லாம் வாஸின் எல்லைக்குட்பட்டதல்ல.
வாஸ் அப்படித்தான். சில விஷயங்களில் அவரொரு ஜீனியஸ். ஆனால் அவருக்குப் பிடிக்காத வேலை என்றால் குழந்தைத்தனமாகத்தான் செயல்படுவார். குழந்தை என்ன செய்தாலும் அழகுதானே? அந்த விதத்தில் ஜாப்ஸ் அவரை அப்படியே ஏற்றுக்கொண்டார்.













Add Comment