செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் பல ஆண்டுகளாகப் பல நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக அது அறிமுகமாகியது சென்ற ஆண்டு நவம்பர் மாத இறுதியில் வெளியாகிய சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி மூலமாகும். கணினிகள் புரிந்து கொள்ளும் நிரல் மொழியல்லாது சாதாரணமான மனிதர்கள் பேசும் மொழியில் இந்த சாட்ஜிபிடியிடம் கேள்வி கேட்டால் உடனடியாகப் பதில் வழங்கியது சாட்ஜிபிடி. எத்துறையில் கேள்வி கேட்டாலும் சலிக்காமல் உடனடியாகப் பதில் சொல்லி மனித குலத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சாட்ஜிபிடி.
அநேகமான நேரங்களில் சரியான பதில் வழங்கிய போதிலும் அவ்வப்போது கட்டுக்கதைகளும் பதிலாகக் கொடுத்தது என்பதும் உண்மை. இது செயற்கை நுண்ணறிவுச் செயலி என்பதால் அதற்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே அது பதிலளித்தது. கேட்கப்படும் கேள்விக்குத் தகுந்த தகவல் இல்லாத போது சில வேளைகளில் அது தவறான பதிலை வழங்கியது. தொடர்ந்து கற்றுக் கொள்வதன் மூலம் மனித மூளையைப் போலத் தனது தவறுகளைத் திருத்தி முன்னேற்றம் காணும் பண்பினைக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாட்ஜிபிடியின் வரவோடு செயற்கை நுண்ணறிவு எப்படி நமது வாழ்க்கையினை மாற்றப் போகிறது. எந்த வேலைகளுக்கு இனி மனிதர்கள் ஊழியர்களாகத் தேவைப்பட மாட்டார்கள். இதனால் யாரெல்லாம் வேலைவாய்ப்பினை இழக்கப் போகிறார்கள் என்றெல்லாம் ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் அவரவர் கருத்துகளோடு நிரம்பி வழிந்தன. அத்துடன் இதை உருவாக்கிய நிறுவனமும் மிகவும் பிரபலமாகியது.
Add Comment