மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சிங்கள தேசமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு 1987-ம் ஆண்டு ஜுலை மாதமளவில் வந்துவிட்டது. ஜே.வி.பியும் எதிர்க்கட்சிகளும் நாடெங்கும் மிகப் பரவலான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. அரசாங்கம்கூட வெளியே ஒன்றைச் சொல்லிக் கொண்டு உள்ளே குமுறிக் கொண்டிருந்தது. ஜே.ஆர். வேறு வழியின்றி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கே.என்.தீக்சித்திடம் பம்மிப் போய் இருந்தார். இதன் பின்னணியைச் சுருக்கமாய்ப் பார்த்துவிட்டால் வரப்போகும் இருட்டு அத்தியாயங்கள் புரியும்.
2009-ம் ஆண்டு புலிகள் முற்றாய் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்கள் அல்லவா.? இந்தத் ‘தோற்கடிப்பு’ இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1987-ம் ஆண்டு ஏற்பட்டு இருக்க வேண்டிய ஒன்று. 80களின் தொடக்கத்தில் தமிழர் விடுதலைக்காக எத்தனையோ இயக்கங்கள் உருவான போதிலும் 80களின் மத்தியில் புலிகள் அனைவரையும் ஓவர்டேக் செய்துவிட்டு தமிழர்களின் ஏகபோக முகவர்கள் ஆகிப் போனார்கள். இந்த நம்பர் ஒன் ஸ்தானத்தை அடைய சகோதரப் படுகொலைகள் மிகத் தாராளமாய் இடம்பெற்ற போதிலும் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் காத்திரமான விடுதலை இயக்கம் என்ற வகையில் அப்போதைய தமிழக அரசு மிகத் தாராளமாய் புலிகளுக்கு ஆதரவை நல்கியது. இந்த லட்சணத்தில்தான் இலங்கை ராணுவம் புலிகளை முற்றாய் ஒடுக்க ‘ஆபரேஷன் பூமாலையை’ மேற்கொண்டது.
Add Comment