17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர்.
ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள். பொதுவாக எருமைகள் கூட்டமாகவே வாழும் பழக்கம் கொண்டவை. இந்தக் கூட்டத்தில் உள்ள எண்ணிக்கை ஒரு சில எருமைகளிலிருந்து பல நூறு எருமைகள் வரையும் இருக்கலாம். ஆபிரிக்காவில் வாழும் எருமைகள் மழைக்காலத்தில் ஆயிரக் கணக்கில் ஒன்று கூடுவதை நாம் அறிந்திருக்கிறோம். இக்காலத்தில் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் ஒரு காரணம். அத்தோடு இளம் கன்றுகளை ஈனும் காலமும் இதுவாகும். இளம் கன்றுகள் பலவீனமானவை. மிக இலகுவாக வேட்டையாடும் மிருகங்களால் கொல்லப்படக் கூடியவை. அதனால் அவற்றைப் பாதுகாப்பதற்காக எருமைகள் இக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவது உதவியாக இருக்கின்றதாம்.
வேட்டையாடும் மிருகங்கள் எப்போதும் பலவீனமான இரைகளை நோக்கியே செல்வது இயற்கை. இது அவர்களுக்கு அதிகம் சேதமில்லாமல் இலகுவாக உணவைப் பெறும் வழியினைக் கொடுக்கிறது. இதனால் எருமைக் கூட்டத்தில் எத்தனை எருமைகள் இருந்தாலும் பலவீனமான எருமைகளும் இளங் கன்றுகளும் குழுவில் நடுப்பகுதியில் இருப்பது எருமைகளது பாதுகாப்பு உத்தியாகும். பலமான எருமைகள் கரைகளில் நிற்பதால் சிங்கம் புலி போன்ற மிருகங்களுக்கு குழுவில் உள்ள எருமைகளை உணவாக்குவது கடினமாக்கப்படுகின்றது.
Add Comment