இசை நிகழ்ச்சிகள், டெல்லி அப்பளம், ஜிகினா பலூன்கள் எனப் பொங்கல் தினத்தன்று சென்னை சங்கமம் நிகழும் இடத்தைப் போல இருந்தது நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. ஜனவரி எட்டாம் தேதி தொடங்கிய 49ஆவது சென்னை புத்தகக் காட்சி, 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று டைட்டில் கார்டு போடும் அளவுக்குக் கைக்குழந்தைகளைக் கூட தள்ளுவண்டிகளில் வைத்து அழைத்து வந்திருந்தனர் மக்கள். நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரிய பலகையில் இலவச அனுமதிக்கான QR codeஐப் பதிவு செய்வதற்குப் பெருங்கூட்டம் இருந்தது. 900+ அரங்குகள், உணவுக் கடைகள், தினசரி நிகழ்வுகளுக்கான சிற்றரங்குகள் ஆகியவற்றில் வாசகர்களைக் கவர்ந்தவை எவை, கடுப்பேற்றியவை எவை என்பதை அவர்களிடமே நேரடியாகப் பேசி தெரிந்துகொண்டோம். அதிலிருந்து சில உரையாடல்கள் இங்கே.
தங்கை மகனுக்குப் போட்டித் தேர்வுப் புத்தகங்களை வாங்க வந்திருந்தார் வழக்கறிஞர் இளவரசன். பத்து வருடங்களுக்கும் மேலாகப் புத்தகக் காட்சிக்கு வருபவர். தமிழர் பண்பாடு, கீழடி, சிந்து சமவெளி ஆய்வு சார்ந்த புத்தகங்கள் அவர் ஆர்வமாக வாங்கி படிப்பவை. சரித்திர நாவல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாற்றைப் படிப்பதன் மூலம் தலைவர்களையும் நமது முன்னோர்களையும் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது என்றார்.















Add Comment