‘ஒரு நாளுக்கு அரைமணிநேரம் செய்திகளைப் பார்த்தாலே அதிகம். அதற்கு மேல் பார்ப்பதற்கு நேரமும் இல்லை, செய்திகளும் இல்லை. எத்தனை சேனல்கள் இருந்தால் என்ன, நாம் பார்ப்பது குறிப்பிட்ட சேனல்களை மட்டும்தான். அது பழக்கம் காரணமாகவும் இருக்கலாம், அந்தச் சேனலின் செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம்’ என்கிறார் ஹரிகுமார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு தொழில் முனைவர்.
மேலும், ‘தமிழ் சேனல்களில் நான் அதிகம் பார்ப்பது புதிய தலைமுறை மட்டுமே. சில நேரம் பாலிமர் செய்திகள் பார்ப்பேன். எனது தந்தை புதிய தலைமுறை, ஏசியாநெட் செய்திகள், இவை இரண்டை மட்டுமே பார்ப்பார். தொலைக்காட்சியில் பார்க்கும் செய்திகள் மட்டும் ஆதாரமல்லவே? கையில் இருக்கும் மொபைலில் நோட்டிபிகேஷன்ஸ் மட்டும் ஆனில் இருந்தால் போதும், செய்திகள் கொட்டிக் கொண்டே இருக்கும். முக்கியமான ஊடகங்களின் வாட்ஸப் சானல்களைப் பின்தொடர்கிறேன். அங்கு வருவதற்குள் இங்கே அதை ஏற்றி விடுவார்கள். எனவே இரவு நேரம் பார்க்கும் செய்திகள் கூட எனக்குப் பழையதாகத் தோன்றும்’ என்கிறார்.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள செய்தி, தினசரி நிகழ்வுகள் (Current affairs) தொடர்பான சேனல்களின் எண்ணிக்கை முந்நூற்று எண்பதுக்கும் மேல். இவ்வளவு சேனல்களுக்குச் செய்திகள் எங்கிருந்து கிடைக்கும்? செய்திகள் ஒன்றானாலும் அதை எப்படி மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள்? அதில்தான் உள்ளது சூட்சமம். அவர்களைப் பொறுத்தவரை செய்திகள் என்பது சாப்பாடு மாதிரி. சில செய்திகள் வீட்டுச் சமையல் மாதிரி, சில சாலையோரக் கடைகள்போல, சில ஹோட்டல்கள் மாதிரி. தேவையான அளவுக்கு உப்பு, மசாலா, காரம் சேர்த்து மக்களுக்குப் பரிமாறுகின்றனர்.















Add Comment