இந்தியாவில் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கப் புறாக்கள் காரணமாக இருந்திருக்கின்றன. புறாக்களுக்காக மும்பையில் சமணர்கள் (ஜெயின் சமூகத்தினர்) ‘சாந்தி தூத் ஜன்கல்யாண்’ என்ற ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் BMC எனப்படும் ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சி வெற்றி பெற அல்லது ஓட்டுகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
மும்பையின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் மட்டுமல்லாமல் ரயில் நிலையங்கள், நடுத்தர வர்க்க அபார்ட்மெண்ட்கள், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள் என நகரமெங்கும் புறாக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்கள் ஊரெங்கும் உள்ளன. அந்த இடங்களுக்கு கபூதர்கானா என்று பெயர். மும்பை தாதர் பகுதியில் புறாக்கள் தங்கி இளைப்பாறவும், அவற்றுக்கு உணவளிக்கவும் ஒரு கபூதர்கானா உள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான புறாக்களுக்கு ஜெயின் சமூகத்தினர் உணவும் நீரும் வழங்கிப் பராமரித்து வருகிறார்கள்.
புறா ஒரு சமாதானப் பறவைதான். சில புறாக்களை ஒன்றாகப் பார்க்க அழகாக இருக்கும்தான். ஆனால் நகரமெங்கும் புறாக்கள் குவிந்திருப்பது மக்களுக்குத் தொல்லையாக மாறிவிட்டது. மும்பையில் உள்ள புறாக்கள் பாறைப் புறா இனத்தைச் சேர்ந்தவை. முரட்டுத்தனமான இந்தப் புறாக்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகின்றன. மேலும் புறாக்களால் மனிதர்களுக்குச் சுவாசத் தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. புறாக்களின் கழிவுகளால் பாரம்பரியத் தலங்கள் சேதமடைகின்றன, அத்தளங்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்திப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது. புறாக்களால் பொதுச் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.















Add Comment