‘நாடகமும் நடிப்பும் என் மூச்சு. நடிப்புக்கலையில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தாமல் திரும்பக் கூடாது’ என்ற வைராக்கியத்துடன் லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாவில் சேர்ந்து கற்றுக்கொள்ள விமானம் ஏறினாள் அந்தப் பெண். டில்லியில் ஆறு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாய்ப் 1933-இல் பிறந்த பெண்ணின் ஆசைக்கு எந்தவிதமான தடையும் சொல்லாமல் அனுப்பி வைத்தது அந்தக் குடும்பம். நடிப்பும் படிப்பும் இருந்தாலும் உண்ண, உயிர் வாழ உணவு வேண்டுமே. அந்தக் கால பிரிட்டிஷாரின் உணவுப் பழக்கங்கள் இந்தியாவில் அதுவும் டில்லியில் சுவை மிகுந்த உணவுகளை உண்டு வளர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தன. பல நாட்கள் உண்ணாமலும் அரைகுறையாக உண்டும் பசியோடும் உறங்கினாள். சில மாதங்கள் கழிந்ததும், பொறுக்கமாட்டாமல் அழுகையோடு அவளது அம்மாவிற்கு அவளது நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதினாள்.
‘அன்புள்ள மதுருக்கு’, ‘செல்ல மகள் மதுருக்கு’ என அவளின் அம்மா இந்தியில் பதில் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். அவை கடிதங்கள் மட்டுமல்ல… ஒவ்வொரு கடிதத்திலும் மிக எளிதாகச் செய்யக்கூடிய இந்திய உணவு வகைகளைப் பட்டியலிட்டு அவற்றின் செய்முறையை எழுதினார். இதை எடு, இதைக் கலக்கு, இதை அடுப்பில் வை, அதைச் சுட வை போன்ற சிறு குறிப்புகள் அல்ல அவை. தனது மகளைப் பக்கத்தில் அமர வைத்து ஒரு தாய் வீட்டில் எப்படி சொல்லிக் கொடுப்பாளோ அப்படி எழுதினார். இவரின் வாழ்க்கை வேறு வடிவம் எடுத்தது இந்தக் கடிதங்களின் மூலம்தான். நடிப்பே என் மூச்சு என்று இருந்தவருக்குச் சமையல் பற்றிய அறிமுகமும், அடிப்படை அறிவும் வந்ததற்கு இந்தக் கடிதங்கள் மட்டுமே காரணம் எனலாம்.
Add Comment