29. இனி
உலகின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனம். நுட்ப உலகின் அசைக்கமுடியாத முன்னத்தி ஏர். பல துறைகளிலும் முதலீடுகளையும், ஆய்வுகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முன்னணி ஆளுமை. பயனாளர்களுக்கு அன்றாடம் நுட்பம், பொழுதுபோக்கு, தகவல், என பல விதங்களில் வரம் அருளும் தேவன். எல்லாவற்றிற்கும் உச்சத்தில் அமர்ந்துகொண்டு மற்ற நிறுவனங்களை ஒருசேர பயத்துடனும், பதற்றத்துடனும் பார்க்க வைக்கிற அசுரன். இப்படி தசாவதாரங்களுக்கும் அதிகமான வேடங்களை அணிந்துகொண்டு, இன்னமும் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது கூகுள். இதன் எதிர்காலத்திட்டங்கள் எப்படி இருக்கும். அல்லது ஒவ்வொரு வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்போதும், இனி கூகுள் அவ்வளவுதான் எனக்கொக்கரிக்கும் எதிராளிகளின் சொற்கள் என்றைக்கேனும் பலித்துத்தான் விடுமா?
செயற்கை நுண்ணறிவும் இயந்திரக்கற்றலும்
கூகுளின் மிக முக்கிய அன்றாடச் செயல்பாடுகளும், ஆய்வும் செயற்கை நுண்ணறிவையும், இயந்திரக் கற்றலையும் சார்ந்தே இயங்குகிறது. மிகத்தீவிரமான அதிக முதலீடுகளையும் இந்தத் துறைகளிலேயே செய்திருக்கிறது. மனிதனின் இடையீடு இன்றி ஒரு செயலியை, இயந்திரத்தை, தயாரிப்பைத் தானே முடிவெடுத்துச் செயல்படும் வண்ணம் உருவாக்குதல்தான் நோக்கம். அதனை மெள்ள நவீனம் சார்ந்து புதுமைகளைப் புகுத்திப் புகுத்தி மேலேற்றி வருகிறது. இதில் மூன்று முக்கிய கிளைகளில் அதன் செயல்பாடு இருக்கிறது.
Add Comment