9. கேரேஜிலிருந்து கார்ப்பரேட்டிற்கு
பெல்டோக்ஷிம் கொடுத்த முதல் முதலீடான ஒரு லட்சம் டாலரைத் தொடர்ந்து லாரிக்கும், செர்கேவிற்கும் பொருளாதார முதலீடுகள் சார்ந்த அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. எல்லோருக்கும் இப்போது இந்தப் புதிய தேடுதல் செயலியின் மீது நம்பிக்கை வந்திருந்தது. நுட்ப ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் கூகுளின் முதலீடுகள் பெருகின. ஒரு லட்சத்திலிருந்து தொடங்கிய கணக்கு ஒரு மில்லியன் டாலராக மாறியது.
ஏற்கனவே நாம் பார்த்தபடி மிகச் சிக்கனவான்களாகிய லாரியும், செர்கேயும் கிடைத்த பணத்தையெல்லாம் கண்மூடித்தனமாய் செலவழிப்பவர்களாக இல்லை. மிகவும் கவனமாகவே தங்கள் முதலீடுகளைத் தேர்ந்தெடுத்தார்கள். மிகக்குறிப்பாக பெல்டோக்ஷிம் தந்த காசோலையை அவர்கள் வங்கிக்குள் செலுத்தவே இல்லை. காசோலை பணமானால், சட்டென்று கரைந்து போய்விடலாம் என்ற கவனம் காரணம்.
பல்கலைக்கழக இணையசேவைச் செலவு நிர்ப்பந்தம் கூடிப்போனதால் செர்கேவின் நண்பரான சூசன் வொஜ்சிகி (Susan Wojcicki) என்ற தோழியின் வீட்டில் ஒரு அறையையும், அவரின் கார் நிறுத்தும் பகுதியையும் வாடகைக்கு பெற்றுக் கொண்டனர். 1700 டாலர்கள் வாடகை என்பது அப்போதைய சூசனின் வாழ்க்கைக்கு பெரிய உதவியாயிருக்கும். தவிர, செர்கே ஒரு தொழில்நுட்பப் பைத்தியம். ஏதேனும் நான்கு கணினிகளை வைத்துக்கொண்டு ஒரு ஓரமாக ஏதேனும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கத்தானே போகிறான் என்று நினைத்து வாடகைக்குக் கொடுத்தார்.
Add Comment