ஒரு காலத்தில் நம் வாழ்வின் முக்கியமான தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவியவை புகைப்படங்கள். இன்றைக்கு அதுவே செல்பேசியில் எண்ணிமப் படங்களாக உருமாறிவிட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பும் செல்பேசியில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றைப் பாதுகாப்பது மிகக் கடினமாகவே இருந்தது. இதை மாற்றியமைத்து இன்று உலகின் மிகப் பெரிய படங்கள் பெட்டகமாக இருக்கிறது கூகுள் போட்டோஸ். இந்தச் செயலியின் கதை விழுந்த இடத்தில் இருந்து எழுவது சாத்தியமே என்பதை நிரூபிக்கும் இரண்டு உதாரணங்களைக் கொண்டது என்றால் நம்ப முடிகிறதா?
பேஸ்புக்குக்கு போட்டியாகச் சமூக வலைத்தளங்கள் உலகில் கூகுள் காலூன்றச் செய்த முதல் மூன்று முயற்சிகள் தோல்வியாகவே முடிந்தன. நான்காவது முயற்சியாக 2011ல் அவர்கள் வெளியிட்டது கூகுள்+. ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இதுவும் தோல்வியே என்று தெரிந்துவிட்டது. இந்தத் துறையில் பேஸ்புக்கின் சக்தி அப்படியானது.
கனடாவில் பிறந்தவர் இந்திய வம்சாவளியினரான அனில் சபர்வால் (Anil Sabharwal). 2009ஆம் ஆண்டு கூகுள் ஆஸ்திரேலியாவில் சேர்ந்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் தலைமையகத்திற்கு அழைத்து அவருக்கு முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார் கூகுள்+ துணை நிறுவனரான பிராட்லி ஹோரோவிட்ஸ். அடுத்த நான்கு ஆண்டுகள் கூகுள்+ உருவாக்கத்தில் கடுமையாக உழைத்தாலும், அந்தப் படைப்பு விரும்பிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தங்களின் படைப்பைச் சுற்றி இருந்த தோல்விக்கு மத்தியில், படங்களைச் சேமிக்கும் வசதி ஒரு வெளிச்சமாகத் தோன்றியது அனிலுக்கு. கூகுள்+ தளத்தில் பயனர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தியது இந்தப் படங்களைப் பதிவேற்றம் செய்யும் வசதியை. இதை உருவாக்கிய அணியில் இருந்த பலரும் இதை அவர்கள் மனம் விரும்பி செய்த வேலையாகவே செய்தார்கள். கூகுள்+ தளத்திலிருந்து இதை மட்டும் தனியாகப் பிரித்து ஒரு செயலியாக வெளியிட வேண்டும் என்று தனது மேலாளரான ஹோரோவிட்ஸ்ஸிடம் சொன்னார் அனில். பின்பு இருவரும் சேர்ந்து கூகுளின் தலைமைக்கு வலியுறுத்தியதில் 2015ல் வெளிவந்தது கூகுள் போட்டோஸ்.
Add Comment