2025 செப்டம்பர் 1 முதல் பதிவுத் தபால் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல்துறை அறிவித்திருக்கிறது. இந்தச் செய்தினூடேயே தபால்பெட்டிகள் மற்றும் அஞ்சல் சேவையும் நிறுத்தப்படும் என்ற வதந்தியும் பரவியது. அஞ்சல்துறை அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆயினும், அஞ்சல் சேவைகளின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அந்த ஆபத்து வெகு தொலைவில் இல்லை.
அஞ்சல் சேவைகள் நிறுத்தப்படும் என்று வதந்தி பரவியபோது, ஒட்டுமொத்தச் சமூக வலைத்தளங்களிலும் இரண்டாயிரங்களுக்கு முன்பு பிறந்த அனைவரிடமிருந்து கலக்கமும் ஏக்கமும் நிறைந்த செய்திகள் வெளிவந்துகொண்டே இருந்தன. பயன்பாட்டில் இல்லாவிடினும், நினைவெங்கிலும் நீக்கமற நிறைந்துவிட்ட ஒன்றாக அஞ்சல் சேவை இருப்பதே இதற்குக் காரணம். இந்தியர்களுக்கு அஞ்சல்துறையின் மீது இப்படிப்பட்ட இதயப் பிணைப்பு எப்படி ஏற்பட்டது? எப்போது அஞ்சல்துறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது? எப்படி வளர்ந்தது? ஏன் இந்த வீழ்ச்சி? விரிவாகப் பார்க்கலாம்.
எழுத்து மூலமான தகவல் பரிமாற்றம் தமிழர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமான ஒன்று. கோவலனுக்கு மாதவி தாழை மடலில் வரைந்து அனுப்பிய கடிதங்கள்தான் நமக்கு அறிமுகமான முதல் அஞ்சல் சேவை. அதன் பிறகு மன்னர் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்காகத் திருமுகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பழக்கப்படுத்திய புறாக்களின் கால்களில் அஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.














Add Comment