2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஆகஸ்ட் 5, 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அரசுக்குச் சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவை நீக்கியதோடு அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது பாஜக. இதனைச் செயல்படுத்த ஏதுவாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அரசியல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவில்லை. பத்தாண்டுகள் கழித்து 2024ஆம் ஆண்டு காஷ்மீரில் தேர்தலை நடத்தி முடித்தனர்.
ஆட்சிக்கு வந்தால் சட்டப்பிரிவு 370 மீட்டெடுக்கப்படும் என உறுதியளித்த ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தோல்வியடைந்தன. வாக்குரிமையை மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்தினர். ஆனால் முழுமையான அதிகாரமில்லாத இந்த ஆட்சி பெரும்பாலும் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. மிகக்குறைந்த அதிகாரம் கொண்ட முதல்வராக ஒமர் அப்துல்லா ஆட்சியைத் தொடர்கிறார்.
Add Comment