புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்! அதனைக் கடல் கற்பிக்கும் மையத்தில் உள்ள தபால் பெட்டியில் போட்டுவிடுங்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகிலுள்ள பழைய நூலகக் கட்டடம் இப்போது புத்துயிர் பெற்று ‘கடல் கற்பிக்கும் மையமாக’ (Ocean Station) உருவெடுத்துள்ளது. இங்கு ஒரு தபால் பெட்டியும் உள்ளது . அதுதான் ‘கடலுக்கு ஒரு கடிதம்’ எழுத நம்மைத் தூண்டுகிறது.
இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் (Environmentalist Foundation of India – EFI) பொது நூலகத் துறையும் இணைந்து நிறுவியுள்ள இந்தக் கடல் கற்பிக்கும் மையம், கடலோரப் பாதுகாப்பு, கடல் வாழ் உயிரின விழிப்புணர்வு, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘சென்னை போன்ற ஒரு நகரத்தில், நீங்கள் கடற்கரையில் நின்றவுடன் அது அமைதியாகிவிடும், கிட்டத்தட்ட ஆன்மிகமாகிவிடும். அதில் நீங்கள் உங்களை இழக்கிறீர்கள். மக்கள் இயல்பாகவே கடலுடன் பேசுகிறார்கள், அதனுடன் இணைய முயற்சி செய்கிறார்கள். கடலுடனான இணைப்பு நமக்குள் ஆழமாக உள்ளது. மக்கள் அதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம்’ என்கிறார்.















Add Comment