செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக வதந்தி வேறு உள்ளதே! என்று உறக்கமின்றித் தவித்தனர். அரசின் சார்பில் ஒரு ட்வீட் வருகிறது, ‘மக்களே, அச்சம் கொள்ளாதீர்கள். அணைகள் வலுவாக உள்ளன.’ என்று. மக்களும் நம்பி உறங்கச் செல்கின்றனர். திடீரென எழுந்தது வெடி வெடிப்பது போன்றொரு பயங்கர ஓசை. என்னவென்று உணர்வதற்குள் ஊரெங்கும் வெள்ள நீர். பல வீடுகள் அடியோடு கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு அணைகள் உடைந்தன. ஊரே இருளில் மூழ்கியது. சூரிய ஒளி படரும் போது நகரமே சேற்றில் மூழ்கி இருந்தது. பல வீடுகள் இருந்த சுவடே இல்லை. சுனாமியைப் போன்ற வெள்ளம் அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கடலில் போட்டுவிட்டது.
லிபியா ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு. எகிப்தின் அண்டை தேசம். டெர்னாவில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் சடலங்கள் கிடைத்துள்ளன. 10 ஆயிரத்து நூறு பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஐநா தெரிவித்துள்ளது. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 891 கட்டிடங்கள் அழிந்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் புள்ளிவிவரங்கள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படிக்கவே பதைபதைப்பு.