1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். 38 லட்சம் என்ன பெரிய தொகையா என்று நினைப்பவர்களுக்கு, அதனுடன் கொரோனா மரணங்களை ஒப்புமைப்படுத்திப் பார்த்தால் புரிந்து விடும். இந்தியாவில் கொரோனாவின் நேரடிப் பலி எண்ணிக்கை 5.4 லட்சம் பேர். அதனை விட 7 மடங்கு அதிகமான மக்கள் வங்காளத்தில் மட்டும் இறந்துள்ளனர் அந்தப் பஞ்சத்தால்.
மீண்டும் 50களுக்கு வருவோம். பிரதமர் நேருவிற்கு அதுபோல் ஒன்று மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம். சீக்கிரமாக நிலைமையைச் சரி செய்ய வேண்டும் என ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கும் போது, முதல் ஐந்திலேயே விவசாய உற்பத்தியைப் பெருக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. திட்டம் வகுத்தால் போதுமா? இப்போது உண்ண உணவு வேண்டுமே! உணவு மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை இந்தியாவிற்கு வந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பெயரே மிக அருமையானது. ‘உலக அமைதிக்காக உணவு’. இத்திட்டத்தின் மூலம் 60 நாடுகளுக்கு உணவு வழங்கி தன்னை ஒரு தாராளப் பிரபுவாக, கொடை வள்ளலாக அமெரிக்கா காட்டிக்கொள்ள நினைத்தது. நாமும் முன்சென்று துண்டு போட்டு வைத்துக்கொண்டோம். ஆனால் இருப்பதிலேயே மட்டமான கோதுமைகளை இந்தியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா.
Add Comment