“தினமும் காலைல ஐம்பது நூறு செலவழிச்சு டிபன் சாப்பிட முடியாது சார். ரெண்டு வடை, ஒரு மொச்சை. காலைல ஏழு மணிக்குச் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பினா மதியம் வரை பசிக்காது. பசிச்சா இருக்கவே இருக்கு இன்னும் ரெண்டு வடை பதினோரு மணிக்கு. சாயங்காலம் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது ரெண்டு பஜ்ஜி. இல்ல வெங்காய வடை. இதுதான் சார் வாழ்க்கை”. முனுசாமியைப் போல இந்த வடையை மட்டும் நம்பி வேலைக்குக் கிளம்பும் கூட்டம் ஏராளம். கட்டட வேலை செய்பவர்கள், எலக்ட்ரீஷியன்கள், பெயிண்டர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் என ஒரு கணிசமான மக்கள் தொகை நாட்டில் இருக்கிறது. பெரியவர், சிறியவர், படித்தவர், படிக்காதவர், வசதியுள்ளவர், அற்றவர் என்ற பேதம் இல்லாத ஒரே பண்டம் இந்த வடைதான் என்பது உண்டோர் வாக்கு.
வாயால் வடை சுடுவது என்ற சொலவடையில் ஒரே நேரத்தில் மனிதரையும் வடையையும் தலைகுனியச் செய்தவர்களை விடுங்கள். வாய் இருப்பதே வடை சாப்பிடத் தானென வாழும் மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா.? அதைத் தேடித்தான் இந்த வ(ந)டைப்பயணம். நாங்கள் இருக்கும் பகுதி மதுரையின் எல்லைப்பகுதிதான். மதுரைக்கே ஐந்து கிலோமீட்டர்தான் எல்லை. வேகமாக ஓடினால் பதினைந்தே நிமிடங்களில் மதுரை எல்லையைக் கடந்துவிடலாம் என்ற அளவு தான் மதுரை. ஆனால் அதற்குள்தான் எவ்வளவு சரித்திர நிகழ்வுகள்! இந்த வடைகள் உள்பட. ஏன்…. மற்ற ஊர்களில் எல்லாம் வடை இல்லையா எனக் கேட்கலாம், இருக்கிறது. வடையின் வயது 2500 ஆண்டுகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இட்லி எல்லாம் பல தலைமுறைகளுக்குப் பின்னர் வந்தது. அதுவும் இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி ஆனது என்று ஒரு பேச்சு. ஆனால் இரண்டும் அன்று ஒன்று சேர்ந்தது இன்று வரை சேர்ந்தே இருப்பது தான் சிறப்பு.
Add Comment